பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக 740 ஏகலைவா பள்ளிகள் பிரபலப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது பேசிய அவர், “157 புதிய நர்சிங் கல்லூரிகள் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய இடங்களில் அமைக்கப்படும். ஐசிஎம்ஆர் ஆய்வு நிறுவனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடுக்கப்படும்.
தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். அறிவியல், மொழி என பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்கள் இடம்பெறச் செய்யப்படும். தேசிய புத்தக ட்ரஸ்ட் , தேசிய குழந்தைகள் புத்தக டிரஸ்ட் ஊக்குவிக்கப்படும். NGOக்களுடன் இணைந்து, இந்த டிஜிட்டல் நூலகத்தை வலுவுடன் கட்டமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
15,000 கோடி ரூபாய் அடுத்த மூன்று ஆண்டுகளில் இலக்கு நிர்ணயத்து, பழங்குடியினருக்கு திறன் மேம்படுத்தும் பயிற்சி வழங்கப்படும். வீடு மற்றும் சுகாதாரமான குடிநீரை பழங்குடியினருக்கு வழங்குவதே இலக்கு. 38,800 ஆசிரியர்கள் புதிதாக பணியமர்த்தப்படுவர். பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக 740 ஏகலைவா பள்ளிக்கூடங்கள் பிரபலப்படுத்தப்படும். இந்தியாவின் ஜிடிபியில் 3.3%, உள்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்காக செலவு செய்யப்பட்டது.
100 முக்கிய போக்குவரத்து கட்டமைப்பு திட்டங்களுக்காக, 75ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கழிவுகளை அகற்றுவதில் மனிதர்களுக்கு பதில், 100% இயந்திரங்களை பயன்படுத்தும் வகையில் துறைகள் சீரமைக்கப்படும். மேலும் கழிவுகளை அறிவியல் பூர்வமாக, மேலாண்மை செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். நகர்ப்புற வளர்ச்சிக்கு 10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.







