கடலூர் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் உட்பட 7 பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த குச்சிப்பாளையம் கெடிலம் ஆற்றின் தடுப்பணைக்கு சுமுதா(16), நவநீதா(19), பிரியா (17), மோனிகா(15), சங்கீதா (17 ), பிரியதர்ஷினி (14 ), காவியா (12) ஆகியோர் இன்று குளிக்கச் சென்றனர். தடுப்பணை அருகே குளித்துக் கொண்டிருந்த போது ஒருவர் நீரின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்டதாக தெரிகிறது.
அவரை காப்பற்ற மற்றொருவர் செல்ல, அவரும் ஆழத்தில் சிக்க என இப்படியாக அனைவரும் கூச்சலிட்டபடியே நீரில் மூழ்கினர். சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக நீரில் மூழ்கியவர்களை மீட்டு கடலூர் தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அனைவரும் உயிரிழந்தனர்.
7 பேரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மருத்துவமனை வந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “இது துரதிருஷ்டமான சம்பவம். மாவட்ட நிர்வாகம் பல முறை எச்சரித்தும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பது வருத்தத்திற்குரியது. இதுபற்றி தகவல் அறிந்த முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிடுங்கள் என்று தெரிவித்தார். உடனடியாக இங்கு வந்து அஞ்சலி செலுத்தி உள்ளேன்” என்று தெரிவித்தார்.







