குடியரசு துணைத்தலைவர் வெங்கயாநாயுடுக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, வெங்கயாநாயுடு திறமை வாய்ந்தவர் என புகழாரம் சூட்டினார்.
இந்திய நாட்டின் புதிய குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், தற்போதைய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் நிறைவடைந்தது. இதனால் அவருக்கு நாடாளுமன்றத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது. அப்போது, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, வெங்கையா நாயுடு மிகவும் புத்திசாலித்தனமாக பேசக் கூடியவர் என்றார்.
அனைத்து மொழிகளிலும் அவர் ஆற்றிய உரைகள் மிகவும் அற்புதமானவை என்றும், இளைஞர்களுக்காக அதிக நேரத்தை வெங்கயாநாயுடு ஒதுக்கி இருக்கிறார் என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
மேலும் தான் தொடர்ந்து வெங்கையா நாயுடுவுடன் பணியாற்றி வந்து இருக்கிறேன். அவர் ஒவ்வொரு பணியையும் சிரம் மேற்கொண்டு, தனிப் பொறுப்புடன் சிறப்பாக செயல்பட்டு முடித்துள்ளார். மிகவும் நகைச் சுவையாக பேசக் கூடியவர். அவர் பேசும் ஒவ்வொரு பேச்சிலும் ஆழம் மற்றும் பொருள் இருக்கும். அவர் பல மொழிகளில் வல்லமை பெற்றவர். அவர் சபையை திறமையாக செயல்படுத்தியதில் இருந்தே இது தெரிய வரும். நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட அவர் செயலாற்றியதை மறக்க முடியைது என்றார்.
உங்களை வெவ்வேறுபட்ட செயல்பாடுகளில் அருகில் இருந்து பார்த்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. இந்த செயல்பாடுகளில் சிலவற்றில் உங்களுடன் இணைந்து பணியாற்ற எனக்கு பாக்கியம் கிடைத்தது. கட்சி தொண்டராக உங்களது கொள்கையாக இருக்கட்டும், எம்எல்ஏவாக, எம்பியாக நீங்கள் பணியாற்றியது அனைத்தும் உடன் இருந்து பார்த்துள்ளேன்.
கட்சித் தலைவராக, அமைச்சரவையில் உங்களது கடின உழைப்பு, துணை குடியரசுத்தலைவராக என அனைத்து துறைகளிலும் நீங்கள் மிகவும் ஆத்மார்த்தமாக செயல்பட்டு வந்து இருக்கிறீர்கள். எதையும் பாரம் என்று ஒருபோதும் நீங்கள் நினைக்கவில்லை. ஒவ்வொன்றிலும், புதிய வாழ்க்கையை சுவாசித்தீர்கள்” என்று பிரதமர் மோடி வெங்கயாநாயுடுக்கு புகழாரம் சூட்டினார்.
– இரா.நம்பிராஜன்








