வேலூர் கோட்டையில் ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய 7பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை

வேலூர் கோட்டையில்  இளம் பெண்ணிடம் ஹிஜாபை கழற்ற வற்புறுத்தியதோடு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட  இளைஞர்கள்  7 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். வேலூரில் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய சுற்றுலா தலமான…

வேலூர் கோட்டையில்  இளம் பெண்ணிடம் ஹிஜாபை கழற்ற வற்புறுத்தியதோடு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட  இளைஞர்கள்  7 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர்.

வேலூரில் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய சுற்றுலா தலமான வேலூர் கோட்டை  உள்ளது. இந்த கோட்டையின் மதில் சுவர் மீது ஏறி சுற்றுலா பயணிகள் அகழியை பார்வையிட்டு சுற்றி வருவதை பெரும்பாலும் விரும்புகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு, வேலூர் சுற்று வட்டாரத்தில் இருந்து இஸ்லாமிய பெண்கள் தங்களது நண்பர்களுடன்  மதில் சுவரின் சுற்றுப்பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இதனை கண்ட சில  இளைஞர்கள், ஹிஜாப் அணிந்து கொண்டு எப்படி நீங்கள் வேறொரு ஆணுடன் ஊர் சுற்றலாம் என கேள்வி எழுப்பியதோடு,  மேலும் ஹிஜாபை அகற்ற வற்புறுத்தினர்.

ஹிஜாபை போட்டுக் கொண்டு  இன்னொரு ஆணுடன் சுற்றலாமா என உருது மொழியில் அந்த பெண்ணிடம் அவர்கள் கேட்கின்றனர். வீடியோ எடுக்க வேண்டாம் என பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொண்ட பிறகும் வீடியோ எடுத்து , அதனை  சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ எடுத்த நபர் குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இது போன்ற செயல்கள் வேலூர் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் பெண்கள் குறித்த பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சமுதாயத்தில் அமைதியை சீர் கெடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கனவே வேலூர் கோட்டையில் நடைபெறும் பல்வேறு குற்ற செயல்களை தடுக்க
அதிகப்படியான காவலர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள
நிலையில் இந்த சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் வடக்கு காவல்நிலைய போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்துள்ளனர். வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது ஏன் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.