அரசு மதுபானக்கடை மேலாளரை கத்தியால் தாக்கி, அவரிடமிருந்த 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பாலூரிலுள்ள அரசு மதுபானக் கடையில் பணியாற்றி வரும் மேலாளர் சுரேஷ் குமார் வழக்கம் போல், நேற்றிரவு கடையை மூடி விட்டு விற்பனை தொகையை கணக்கிட்டு எடுத்து சென்றுள்ளார். பொங்கல் விடுமுறை காரணமாக 7 லட்சத்து 80ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இத்தொகையை தனது நண்பர் சங்கர் உடன் சுரேஷ்குமார் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். அம்மனூர் வழியாக செல்லும் போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கிவிட்டு, அவர்களிடமிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமாரும் சங்கரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







