பல்கலைக்கழகங்களில் 69% இட ஒதுக்கீடு முறையே செயல்படுத்தப்படும்-அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் இருக்கும் இட ஒதுக்கீட்டு முறையே தான் பின்பற்றப்படும், 69% இட ஒதுக்கீடு முறையை சரியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை…

தமிழ்நாட்டில் இருக்கும் இட ஒதுக்கீட்டு முறையே தான் பின்பற்றப்படும், 69% இட ஒதுக்கீடு முறையை சரியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

பல்கலைக்கழகங்களில் பயோ டெக்னாலஜி மட்டுமல்லாமல், மற்ற படிப்புகளுக்கும் 69% இட ஒதுக்கீட்டை சரியாக செயல்படுத்த சுற்றறிக்கை அனுப்பப்படும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். தவறுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இடஒதுக்கீட்டை எல்லா இடங்களிலும், கல்வி நிலையங்களில் மட்டுமல்ல, வேலைவாய்ப்பிலும் பெறுவதற்காக குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும் இட ஒதுக்கீட்டு முறையே தான் பின்பற்றப்படும்.

பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான இட ஒதுக்கீடு கடந்த ஆண்டே நிறுத்தப்பட்டுவிட்டது. சமூக நீதிக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பயோடெக் படிப்பில் தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இந்த ஆண்டு கல்லூரிகளில் முழுப்பாடத்திட்டமும் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 2022-23-ம் ஆண்டிற்கான முதுகலை (எம்.எஸ்சி,) உயிரி தொழில்நுட்பவியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. மொத்தம் 30 இடங்கள் மட்டுமே உள்ள இப்படிப்பிற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பத்தின் 16-வது பிரிவில் சிறப்பு வகைப்பாட்டின் கீழ் பொருளாதாரத்தில் நலிவுற்றோர், மாற்றுத்திறனாளிகள், பொருந்தாது என மூன்று உட்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், விண்ணப்பத்தின் கீழ் பகுதியில், பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10% இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்றோர் என்ற இட ஒதுக்கீடு தமிழக பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.