இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகாலம் பணிபுரிவதற்கான வாய்ப்பை இளைஞர்களுக்கு வழங்கும் அக்னிபாத் எனும் புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முப்படைகளின் தளபதிகள் முன்னிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனை அறிவித்தார்.
இந்த திட்டத்தின்படி 45 ஆயிரம் இளைஞர்கள் ராணுவத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், இதற்கான பணி இன்னும் 90 நாட்களில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17.5 வயதில் இருந்து 21 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் அக்னிவீர் என்று அழைக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு 4 ஆண்டு கால பணி வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஆண்டில் 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் ஆண்டில் 33 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் ஆண்டில் 36,500 ரூபாயும் 4ம் ஆண்டில் 40 ஆயிரம் ரூபாயும் ஊதியமாக வழங்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
4 ஆண்டு முடிவில் பணியில் இருந்து விடுவிக்கப்படுவோருக்கு ரூ.11.71 லட்சம் சேவை நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதேநேரத்தில், இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டு கால பணியின் முடிவில், 25 சதவீதம் பேர் ராணுவத்தில் நிரந்தரமாக பணிபுரிய தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு அடுத்து 15 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.












