5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் விடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
5ஜி சேவைகள் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளது. மொத்தம் 72097.85 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்தில் விடப்படவுள்ளது. இது 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் 5ஜி சேவைகளை வழங்குவதற்கு இந்த அலைக்கற்றை ஏலத்தில் விடப்படும்.
தற்போது 4ஜி அலைக்கற்றையைப் பயன்படுத்தும்போது நாம் பெறும் இணைய வேகத்தைக் காட்டிலும் 5ஜி அலைக்கற்றை 10 மடங்கு வேகமாக இயங்கும்.
இதுகுறித்து தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “பாரத்5ஜியின் ஒரு பகுதியாக அலைக்கற்றை ஏலம் இன்று அறிவிக்கப்பட்டது” என்றார்.
அலைக்கற்றை கட்டணங்களை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஆண்டுதோறும் 20 சம தவணைகளில் கட்டணம் செலுத்தலாம். ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும் இந்தக் கட்டணம் முன்கூட்டியே செலுத்த வேண்டும். ஏலதாரர்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு அலைக்கற்றையை சரணடைய செய்வதற்கான விருப்பத் தேர்வு வழங்கப்படும் என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மணிகண்டன்








