குடியரசு தலைவர் தேர்தல்- பாஜகவிடம் காங்கிரஸ் கூறியது என்ன?

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தும் பொதுவேட்பாளரை ஏற்றுக்கொள்ள தயாரா என பாஜகவிற்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ந்தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு…

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தும் பொதுவேட்பாளரை ஏற்றுக்கொள்ள தயாரா என பாஜகவிற்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது

குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ந்தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ந்தேதி நடைபெற உள்ளது. ஜூலை 21ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

குடியரசு தலைவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக முன்னிறுத்தும் வேட்பாளர் யார், எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தும் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்னும் விடைதெரியவில்லை.

இந்த முறை எதிர்க்கட்சிகளின் சம்மதத்துடன் பொது வேட்பாளரை நிறுத்தி குடியரசு தலைவரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் கூட்டணி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அடங்கிய குழுவை அக்கட்சி அமைத்துள்ளது. குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக பிற கட்சிகளுடன் காங்கிரஸ் சார்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக ராஜ்நாத் சிங் தம்மிடம் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே,  எதிர்க்கட்சிகளின் எண்ணங்கள் என்ன என்பதை அறிய பிரதமர் மோடி ஆர்வமாக உள்ளார் என ராஜ்நாத் சிங் தம்மிடம் தெரிவித்ததாக கூறினார். பாஜக யாரை வேட்பாளராக முன்னிறுத்தப்போகிறது என தாம் கேட்டபோது அதற்கு உறுதியான பதிலை ராஜ்நாத்சிங் தெரிவிக்கவில்லை என்றும் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். சர்ச்சைகள் இல்லாத ஒரு நபரை குடியரசு தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தினால் அதனை ஏற்றுக்கொள்ள பாஜக தயாரா என்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார்.

 

 

 

 

.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.