நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகள் நாளை முற்றுகையிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நேஷ்னல் ஹெரால்டு நிதிமுறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம், அமலாக்கத்துறை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியினர் மூன்றாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, டெல்லி போலீசார் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டினார்.
இது சட்டவிரோத செயல் என குறிப்பிட்ட அவர், இதில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், அவர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தினார்.
டெல்லி போலீசாரின் இந்த அத்துமீறலைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகள் முற்றுகையிடப்படும் என தெரிவித்த ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அதோடு, மாவட்ட அளவிலும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டை டெல்லி போலீஸ் மறுத்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு காவல் ஆணையர் சாகர் ஹூடா, காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அக்பர் ரோடு மற்றும் அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். எனவே, இந்த பகுதிகளில் யாரும் அத்துமீறி கூடக் கூடாது என காங்கிரஸ் கட்சிக்கு நேற்றே எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாகக் குறிப்பிட்ட சாகர் ஹூடா, இருந்தும் சட்டவிரோதமாக ஏராளமானோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
இதன் காரணமாக இன்று போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த சாகர் ஹூடா, கடந்த 3 நாட்களில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.









