அமிலம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள்: பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு துறையினர்..

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமிலம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் உணவு பாதுகாப்பு துறையால் குப்பை கிடங்கில் கொட்டி பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியில்…

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமிலம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் உணவு பாதுகாப்பு துறையால் குப்பை கிடங்கில் கொட்டி பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியில் ஏராளமான மாம்பழங்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மாம்பழங்களை ஏற்றுமதி செய்யும் குடோன்கள் உள்ள சூழலில், இங்கிருந்து டன் கணக்கிலான மாம்பழங்கள் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று பிரானூர் பார்டர் பகுதியில் செயல்பட்டு வரும்,மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான மாம்பழக் குடோனில் தடை செய்யப்பட்ட அமிலத்தை
பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைத்துள்ளதாகவும், இதனால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு கிடைத்த தகவலின்
அடிப்படையில், விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாம்பழங்களை
தண்ணீரில் போட்டு சோதனை செய்தார்.அப்பொழுது, மாம்பழங்கள் அனைத்தும் மிதக்கவே அமிலங்கள் மாம்பழங்கள் மீது அடிக்கப்பட்டிருந்தது உறுதியானது.

அதனைத் தொடர்ந்து, சுமார் 500 கிலோ மதிப்பிலான அமிலம் மூலம் பழுக்க
வைக்கப்பட்டுள்ள மாம்பழத்தை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி
அவற்றை செங்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி பினாயில் ஊற்றி அழித்தார்.

மேலும், இது போன்ற அமிலம் கலந்த ஸ்பிரே அடித்து மாம்பழங்களை பழுக்க
வைப்பவர்கள் மீதும், செயற்கை கற்களை பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க
வைப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு
பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மாம்பழ குடோன்கள் மற்றும் மாம்பழங்களை விற்பனை செய்யும் கடைகள் நடத்தி
வருபவர்கள் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் லைசன்ஸ் பெற்ற
பிறகு விற்பனையில் ஈடுபட வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.