சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 140 ரன்களை இலக்காக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.
2023ம் ஆண்டின் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த நிலையில் பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர்.
மூன்று ஓவர்களின் முடிவிலேயே மூன்று விக்கெட்களை இழந்துள்ளது. ரோஹித் சர்மா, இஷாந்த் கிஸன் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் ஆட்டமிழந்தனர். அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரன் எதுவும் எடுக்காமலேயே டக் அவுட் ஆனார். இதன் பின்னர் நிதானமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 ரன்களில் ஜடேஜாவின் பந்தில் போல்ட் ஆனார்.
இதனைத் தொடர்ந்து வதேரா – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை அதிகரித்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த நேஹால் வதேரா 64 ரன்கள் எடுத்த நிலையில் பத்திரனா பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி 139 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணி தரப்பில் மதீஷா பத்திரனா 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.







