தி கேரளா ஸ்டோரி படம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல மாறாக தீவிரவாதத்திற்கு எதிரானது என இப்படத்தில் நடித்த நடிகை சித்தி இத்னானி தெரிவித்துள்ளார்.
சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ நேற்று வெளியானது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் மதம் மாறி பின்னர் தீவிரவாதிகளாக மாறியதாகவும், இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் படம் தவறான செய்தியை கூறுகிறது. இதனால் கேரளாவில் இப்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த படத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.
இந்த நிலையில், நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘லவ் ஜிகாத்’ பிரச்னையை எழுப்புவதன் மூலம் மாநிலத்தை மத தீவிரவாதத்தின் மையமாக சித்தரிக்க சங்பரிவார் அமைப்புகள் பிரசாரத்தை கையிலெடுத்துள்ளது என, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளர்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடினார் .
சென்னையில் 15 இடங்களில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாவதை ஒட்டி 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் திருமங்கலம் வி.ஆர் மால், ராயப்பேட்டை மால், சத்தியம் திரையரங்கம் உட்பட 6 திரையரங்குகளை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்த இப்படத்தில் கீதாஞ்சலி மேனன் கதாபாத்திரத்தில் நடித்த “ சித்தி இத்னானி” தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
“தி கேரளா ஸ்டோரி படம், வெறுப்பை உருவாக்க அல்ல விழிப்புணர்வு உண்டாக்குவதற்குத்தான். எந்த மதத்திற்கும் இப்படம் எதிரானது அல்ல. மாறாக தீவிரவாதத்திற்கு எதிரானது.” என தெரிவித்துள்ளார்.







