வந்தே பாரத் விரைவு ரயில் அரக்கோணம் சந்திப்பு அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் ரெயிலின் முன்பக்கம் லேசாக சேதமானது.
75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அடுத்த ஆண்டிற்குள் 75வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு பகுதிக்கும் வந்தே பாரத் ரயில் சேவையையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், முதற்கட்டமாக அக்டோபர் 6ம் தேதி குஜராத்–மகாராஷ்டிரா இடையே இயக்கப்பட்ட ரயிலில் எருமை மாடுகள் மோதியதில் 4 மாடுகள் உயிரிழந்தன. ரயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 7ம் தேதி அதே ரயிலில் பசுமாடு ஒன்று மோதியதில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. பசுமாடு மோதி ரயில் சேதமடைந்ததால் பசுமாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து அக்டோபர் 8ம் தேதி காலை 6 மணிக்கு டெல்லியிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் சக்கரம் திடீரென ‘ஜாம்’ ஆனது. இதனால் பயணிகள் 5மணி நேரம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் தவித்தனர். கடந்த மாதம் 29ம் தேதி மும்பை–காந்திநகர் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்தநிலையில், நேற்று இரவு மைசூரில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் விரைவு ரயில் அரக்கோணம் சந்திப்பு அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் ரயிலின் முன்பக்கம் லேசாக சேதமானது. ரயிலில் அடிப்பட்டு கிடந்த கன்றுக்குட்டியை ஊழியர்கள் அகற்றினர். சிறிது நேரம் நிறுத்தப்பட்ட ரயில், மீண்டும் சென்னை நோக்கி இயக்கப்பட்டது. சென்னை–மைசூர் வரை இயங்கும் 5வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் நவம்பர் 11ம் தேதி பிரதமர் மோடி துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







