இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், நியூ சண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று (டிச.17) நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடும். அதேபோல், தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழந்துவிடும்.
எனவே, இந்த போட்டியில் வெற்றி பெற தென் ஆப்பிரிக்க அணி கடுமையாக போராடும். இதனால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.







