தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 47 காவலர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகம் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் உயிரிழப்பு தொடர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இச்சூழலில் தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 47 காவலர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 20,241 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் தொற்று பாதிப்பு 2,000க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த பின்னணியில் தொற்று பாதிப்பு தடுப்பு பணியில் முழுவீச்சாக செயல்பட்டுக்கொண்டிருந்த காவல்துறையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 47 காவலர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
2021 ஜனவரி முதல் மே மாதம் முடிய 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். இதில் கொரோனா நோய்த்தொற்றால் மே மாதத்தில் மட்டும் 47 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இது தவிர உடல்நலக்குறைவு, உயிரிழப்பு , விபத்து உள்ளிட்ட காரணங்களால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் 83 காவலர்கள் உயிரிழந்தது ஒரே மாதத்தில் நிகழ்ந்த அதிகபட்ச இழப்பாகும்.
தமி்ழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 434 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







