அதிகமானோர் பதிவு செய்ய முயன்றதால் தமிழக அரசின் இ- பதிவு இணையதளம் முடங்கியது.
கொரோனா தொற்று பரவலைக் குறைக்க மே 24ஆம் தேதி முதல் அமலில் இருந்த ஊரடங்கில் இன்று முதல் சில தளர்வுகள் அமலுக்கு வந்தன. முழு ஊரடங்கின் போது இறப்பு மற்றும் அவசர மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இ-பதிவு அனுமதிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான அனுமதி இருந்த நிலையில், அதிகமானோர் விண்ணப்பிக்கத் துவங்கியதால் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சுயதொழில் செய்வோர் கடைகளை திறக்கவும், வெளி இடங்களுக்கு சென்று வேலை செய்யும் வகையிலும் இ-பதிவு இணைய தளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள், தனியார் பாதுகாப்பு சேவையில் உள்ளவர்களுக்கு இ- பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதல் ஒரே நேரத்தில் அதிகமானோர் இ-பதிவு இணையதளத்தில் குவிந்து பதிவு செய்ய ஆரம்பித்தனர். இதன் காரணமாக கூடுதல் இ-பதிவுக்கு அனுமதி கொடுத்த சிறிது நேரத்திலேயே இணையதளம் முடங்கியது. உள்ளே வந்தவர்கள் நீண்ட நேரம் முயற்சித்தும் இ-பதிவு செய்ய முடியாதததால் ஏமாற்றமடைந்தனர். சிறிது நேரத்தில் இணையதளத்தில் உள்ள பிரச்சினை சரிசெய்யப்பட்டு செயல்பாட்டு வந்தது.







