தமிழகத்தில் இந்த வருடம் 9 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து
கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களில் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திண்டுக்கல், தேனி, திருச்சி, கரூர் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளிடம் மண்டல வாரியான 2022-23ம் ஆண்டு வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 3,500 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.1,960 தான் வழங்கப்பட்டது. ஆனால் அதனை படிப்படியாக உயர்த்தி கடந்த வருடம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,160 வழங்கப்பட்டு உள்ளது.
விவசாயிகளின் வசதிக்காக எங்கு வேண்டுமானாலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கலாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 1,699 கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. நேற்றைக்கு வரைக்கும் விவசாயகளிடம் இருந்து 9,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் பிரதிநிதி மற்றும் அதிகாரிகள் உட்பட ஏழு பேர் கொண்ட குழு ஒப்புதல் அளித்தால் உடனடியாக எங்கு வேண்டுமானாலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் பணி புரியக்கூடிய அதிகாரிகள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது நுகர்வோர் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளிக்கலாம்.
மேலும் இதற்காக டோல் ஃப்ரீ நம்பர் வழங்கப்பட்டுள்ளது. அதில் விவசாயிகள் தவறு நடக்கும் பட்சத்தில் புகார் அளிக்கலாம். இதற்காக பத்து பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்கும் பட்சத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் மேலும் ஒரு சிலர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் 10 முதல் 15 லட்சம் மெட்ரிக் டன் அளவு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு அடுத்த நாளே அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.