44வது செஸ் ஒலிம்பியாட், ஊர் கூடி இழுத்த தேர் என விளையாட்டு மேம்பாட்டுத் துறைச்செயலாளர் தெரிவித்துள்ளார்
மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு விளையாட்டு மேம்பாட்டுத் துறைச்செயலாளர் அபூர்வா நியூஸ் 7 தமிழுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் எல்லா விசயங்களையும் உன்னிப்பாகக் கவனிப்பார், நிறையப் பேரின் உழைப்பு இதில் உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி ஊர் கூடி இழுத்த தேர் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஓய்வில்லாமல் பணியாற்றுவது சோர்வாக இருக்கும். ஆனால், ஓய்வைப் பற்றி, தூக்கத்தைப் பற்றி யோசிக்க நேரமில்லை. செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருந்தது. ஓய்வில்லாமல் பணியாற்றினாலும் சந்தோசமாகத்தான் செய்தோம் என மகிழ்ச்சியாகத் தெரிவித்த அவர், அதிகமான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதுதான் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டத்தின் நோக்கம் எனக் கூறினார்.
அதேபோல, 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க & நிறைவு விழா கலை வடிவங்களின் பின்னணியிலிருந்த ராகினி அளித்த போட்டியில், தொடக்க விழா, நிறைவு விழா ஒரே இடத்தில் நடைபெற்றது. 188 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபெறுவதால் அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டோம் எனக் கூறினார். மேலும், இரவு, பகலாக உழைத்துக் கலை வடிவங்களை உருவாக்கியதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், விழா நிகழ்வுகளை அனைவரும் பாராட்டுவதற்கு மாநிலம் மேல் இருக்கின்ற பற்றே காரணம். எல்லோரும் நாம கலக்கிட்டோம்னு சொன்னார்கள், நாங்கள் கொடுத்த யோசனைகள் எல்லாம் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒகே சொன்னார். அரசு அதிகாரிகள் உறுதுணையாக இருந்தனர். முதலமைச்சர் மிகவும் பாராட்டினார். யாரும் பார்த்திராத வகையில் நடத்த வேண்டும் என முதலமைச்சர் விரும்பினார் எனத் தெரிவித்தார்.








