இந்தியா முழுவதிலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தயார் ஆவோம்… நாற்பதும் நமதே… நாடும் நமதே… என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து சூளுரைத்தார்.
திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆழித்தேர் வடிவில் 7,000 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது கலைஞர் கோட்டம். இதில் கருணாநிதியின் உருவச்சிலை, அவரது தந்தை முத்துவேலர் நினைவு நூலகம், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம், கூட்ட அரங்கு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இதன் திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பாகவே சென்னையில் இருந்து திருவாரூர் வந்து விட்டார். நேற்று விழா ஏற்பாடுகளை கவனித்த அவர், இன்று காலையிலும் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் ஆகிய கலை நிகழ்ச்சிகளிலும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சிறப்பித்தது மட்டுமின்றி நிகழ்ச்சிகளையும் முழுமையாக இருந்து கண்டு மகிழ்ந்தார்.
காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் உணவு இடைவேளைக்கு பிறகு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. கலைஞர் கோட்டத்தினையும், கருணாநிதி உருவச்சிலையையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி செல்வி ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் பீகார் துணை முதலவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்று முத்துவேலர் நினைவு நூலகத்தை திறந்து வைத்தார். உடல்நலக்குறைவு காரணமாக இந்த நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது வாழ்த்துரையை திமுக எம்பி திருச்சி சிவா நிகழ்ச்சியில் வாசித்தார். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த கலைஞர் கோட்ட அருங்காட்சியகத்தில், கருணாநிதியின் உருவச்சிலை, அவரது தந்தை முத்துவேலர் நினைவு நூலகம், இரண்டு திருமண மண்டபங்கள், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம், கூட்ட அரங்கு, கருணாநிதியின் அரிய புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் கருணாநிதி பயன்படுத்திய பொருட்களும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடலும் இசைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கலைஞர் கோட்டத்தினையும், கருணாநிதி உருவச்சிலையையும், திறந்து வைத்து பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
திமுக தலைவர் கருணாநிதி தமிழின தலைவராக போற்றப்படுகிறார். அவரை நாடு போற்றும் தலைவராக மாற்றியது இந்த திருவாரூர் தான். தேர் புறப்பட்டு வந்து அதே இடத்தில் நிற்கும் என்பார்கள். அந்த வகையில் இங்கு கலைஞர் கோட்டத்தை அமைத்துள்ளனர். இந்த கலைஞர் கோட்ட அரங்கத்தை சரியாக பராமரியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். திராவிட மாடல் ஆட்சியை நான் மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன்.
இந்திரா காந்தி முதல் இந்தியாவின் அத்தனை பிரதமர்களிடமும் நட்புறவோடு இருந்தவர் கருணாநிதி. அப்படிப்பட்டவர் இந்திய அரசியலில் மாபெரும் ஆளுமையாக இருந்தவர். பீகாரில் வரும் 23ம் தேதி மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் மாநாடு நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளாக காட்டாட்சியை பரப்பி வரும் பாஜகவை நாம் அகற்ற வேண்டும். அதற்காக பாட்னாவில் முதல் விளக்கை நிதிஷ்குமார் ஏற்ற உள்ளார். நானும் அங்கு செல்ல உள்ளேன். இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டிய கடைமையில் நான் இருக்கிறேன். மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் தமிழகத்தில் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறோமோ அதே போல் தேசிய அளவிலும் இருக்க வேண்டும். அதற்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியா முழுவதிலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தயார் ஆவோம். 40ம் நமதே – நாடும் நமதே.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா










