உங்கள் சொந்த வீடு திறந்திருந்தால் என்ன உரிமையுடன் நீங்கள் நுழைவீர்ககளோ, அதே உரிமையுடன் நுழைய ஹைதராபத்தில் ஒரு வீடு அனைவருக்குமாக எப்போதும் திறந்திருக்கிறது. அனைவரும் செல்லலாம்…. வயிற்று பசியை மட்டும் அல்ல, அறிவு பசியையும் தீர்த்துக்கொள்ளலாம்….
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், கொத்தபேட் லக்ஷ்மி நகர் காலனி பகுதியில் அந்தரி இல்லு என்கிற (Open House) வீடு ஒன்று உள்ளது. மருத்துவ தம்பதியான சூர்யபிரகாஷ், காமேஷ்வரி ஆகியோரின் வீடுதான் இது. 2006-ஆம் ஆண்டு முதல் தங்கள் வீட்டை Open House – ஆக பொதுமக்களுக்காக திறந்து விட்டிருக்கின்றனர் இந்த தம்பதி. அது முதல் யார் வேண்டுமானாலும் வீட்டிற்குள் வரலாம். அங்குள்ள மளிகை ஜாமான்கள், காய்கறிகளை கொண்டு உங்களுக்கு தேவையானதை சமைத்து உண்ணலாம். விட்டிலேயே தங்கலாம், படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் நிறைந்திருக்கும். விரும்பியதை படிக்கலாம். யாரும் உங்களை எதுவும் கேட்கமாட்டார்கள். உங்கள் சொந்த வீட்டில் இருப்பது போன்றே வசிக்கலாம். அங்கு வசிக்க நீங்கள் மனிதனாக இருப்பதை தவிர வேறு எந்த தகுதியும் தேவையில்லை.
ஏற்கனவே ஆங்காங்கே இயங்கும் ஆதரவற்றோர் இல்லமெல்லாம் இப்படி இயங்குவது உண்டே என்று தோன்றலாம்… ஆனால் இந்த வீடு அந்த வகைக்குள் அடங்காது. ஏனென்றால் அங்கெல்லாம் உங்களுக்கு சேவை வழங்கப்படும். ஆனால் இந்த வீடு உங்களுடையது. உங்களுக்கு தேவையான உணவை சமைத்து சாப்பிட அனைத்து வசதிகளும் இருக்கும். நீங்கள் விரும்பியவற்றை சமைத்து உண்ட பின், அவற்றை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். முழுக்க முழுக்க சுயசேவை அமலில் உள்ள வீடு இது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ஓரிரு உதவியாளர்கள் இருப்பார்கள். அவர்களை நாடலாம்.
இதே போன்று வீட்டிலேயே சுமார் 25 பேர் அமர்ந்து படிக்கும் அளவுக்கு சின்ன நூலகமும் உள்ளது. அந்த நூலகத்தில் போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் இருக்கும். இதுமட்டுமல்லாது அனைத்து நாளேடுகளும், வார இதழ்களும், மாத இதழ்களும் இருக்கும். தேவையானதை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இந்த வீட்டில் உள்ளவை அனைத்தும் அனைவருக்கும் சொந்தமானது.
இந்த மருத்துவ தம்பதி தங்கள் வீட்டை பொதுமக்களுக்காக திறந்துவிட்டிருக்கும் நிலையில், யாரேனும் இந்த சேவையில் பங்கேற்க விரும்பினால், பணமாக மட்டும் அல்ல, பொருளாகவும் கொடுத்து உதவாலாம். இல்லையேல் அறிவுரீதியாகவும் துணை நிற்கலாம். இப்படி பலர் கொடுத்த புத்தகங்கள், நாற்காலிகள் பல இந்த வீட்டில் இருக்கின்றன.
எல்லாமும், எல்லாருக்கும் சொந்தம் என்ற கொள்கையில் திறந்துள்ள இந்த வீட்டில் 6 பிரசவம் நடந்துள்ளது. அதுமட்டுமல்லாது, அந்த வீட்டின் மேலேயே இயங்கும் மருத்துவமனையில், கணவன் மனைவியான சூர்யபிரகாஷ், காமேஷ்வரி ஆகிய இருவரும் மருத்துவ சேவையும் வழங்கி வருகின்றனர்.
இந்த இல்லம், கணவனை இழந்தோர், கணவரை பிரிந்தோர் மட்டுமல்லாது இனம், சாதி, மதம் கடந்து யாரை வேண்டுமானாலும் வரவேற்கும் இல்லமாக இருக்கிறது. சக மனிதனுக்கு உதவ வேண்டும் என தோன்றுகிறதா எதுவாக இருந்தாலும் உங்களது பங்களிப்பை அளிக்கலாம். இளைஞர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ள இந்த அந்தரி இல்லு, பல அரசு அதிகாரிகளையும் உருவாகும் இடமாக இருப்பதோடு, பல குழந்தைகள் கண் திறந்து உலகை முதலில் பார்க்கும் இடமாகவும் இருக்கிறது.
மனிதம் சாகாது இருக்கிறது என்பதற்கு முன்மாதிரியாக திகழும் இந்த தம்பதியின் சேவை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருப்பது மட்டுமல்ல, அனைவருக்கும் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதத்தையும் தட்டி எழுப்புகிறது அல்லவா.







