ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா்.
கடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ஆளும் பாஜக அரசு அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் என்பது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நீண்டகால செயல் திட்டங்களில் ஒன்றாகும். மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.
பிரிவு 370-ஐ நீக்கிய உடனேயே அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு, இணைய சேவை ரத்து மற்றும் முக்கியமான அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறை போன்றவற்றை மத்திய அரசு அமலில் கொண்டுவந்தது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரின் சிறப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறாமல் இருந்தது.
அப்போது, ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினம் தோறும் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல்சாசன அமா்வு தொடா்ந்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மெஹபூபா முஃப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா். இது தொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
”காவல் துறையினா் என்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளனா். பிடிபி தலைவா்கள் பலரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். பிடிபி கட்சியை சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் என பலரும் காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனா். ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை நிலவுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது பொய் என்பதை இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.
I’ve been put under house arrest along with other senior PDP leaders today. This comes after a midnight crackdown where scores of my party men are illegally detained in police stations. GOIs false claims about normalcy to the SC stands exposed by theirs actions driven by… pic.twitter.com/gqp25Ku2CJ
— Mehbooba Mufti (@MehboobaMufti) August 5, 2023
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை வெகுசிறப்பாக மக்கள் கொண்டாட வேண்டுமென ஒருபக்கம் அரசு தெரிவிக்கிறது. மற்றொரு பக்கம், மக்களின் உண்மையான உணா்வுகளை அடக்குவதற்குக் காவல் துறையை அரசு பயன்படுத்தி வருகிறது. அரசின் இத்தகைய நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளும் என நம்புகிறேன்’’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.







