ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா, 50 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். விருத்திமான் சாஹா 47 ரன்கள் அடித்தார்.
இதையும் படியுங்கள் : ஆகஸ்ட் 11ம் தேதி வருகிறான் ’மாவீரன்’ – படக்குழு அறிவிப்பு
இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில், லக்னோ அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. 2வது மற்றும் 3வது பந்துகளில், கே.எல்.ராகுல் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் வெளியேற, அடுத்தடுத்த பந்துகளில் பதோனி மற்றும் தீபக் ஹூடா ரன் அவுட் ஆகினர். இறுதியாக 128 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்திடம் வீழ்ந்தது.








