அரசியலுக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்துவிட, எதிர்க்கட்சித் தலைவர் வரை வளர்ந்த விஜயகாந்த் அமைதியாக இருக்க, கமலின் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கை கோர்க்கவுள்ள நிலையில், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாகிறது என்கிற பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. இப்போது அந்த பேச்சு வர காரணம் என்ன…? பார்க்கலாம்…
இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக இரண்டும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே நடிகர் விஜய் மக்கள் இயக்கமும் உறுப்பினர் சேர்ப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்தியுள்ளனர். அத்துடன் தொகுதிவாரியான கள நிலவரங்களையும் சேகரித்து வருகிறார்கள். இதற்காக அனைத்து, மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஒரு படிவத்தையும் அனுப்பியுள்ளனர்.
அந்த படிவத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் உள்ள மொத்த வாக்காளர்கள், கடந்த 5 தேர்தல்களில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்கள், அவருடைய கட்சி, கட்சியின் செல்வாக்கு உள்ளிட்ட விபரங்கள், தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள சமூகம், தொழில், முக்கிய இடங்கள், முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, மொத்த வாக்குச்சாவடிகள் அவற்றில் விஜய் மக்கள் இயக்கத்திற்கான பூத் கமிட்டி அமைப்பு குறித்த விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.
இது ஒருபுறமிருக்க மக்கள் இயக்க நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சென்னையில் சந்தித்து விஜய் சுருக்கமாக பேசவுள்ளார். மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட வாரியாக சென்று தொகுதி, பகுதி நிர்வாகிகளைச் சந்தித்து விரிவாக பேச உள்ளார் என்றும் சொல்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல், விஜய் அரசியலுக்கு வருவார் என்று பேசப்படுகிறது. அவரது படம் மற்றும் பட விழாக்களில் அவர் பேசும் வசனங்கள் அதற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்து வருகின்றன. அதற்கு கிடைக்கும் வரவேற்பும் விமர்சனமும் கவனத்திற்குள்ளாகி வருகின்றன.
இதையும் படியுங்கள் : கடைசி ஓவரில் 4 விக்கெட் – குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி!
இந்நிலையில், ’’அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் விஜய் களமிறங்கிறார் என்றும். அதெல்லாம் இல்லை. அதைத் தொடர்ந்து 2026ம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தல்தான் அவரது இலக்கு. அதற்கு விஜய் தயாராகி வருகிறார். விரைவில் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற இருக்கிறார். இதற்கான முதற்கட்டப்பணிகளை தொடங்கி விட்டனர். இதன் வெளிப்பாடுதான் அண்மையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள்’’ என்கிறார்கள்.
இதற்கிடையில்தான், அண்மையில் சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள், தலைமையின் உத்தரவுப்படி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர், தீரன் சின்னமலை சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை, இப்தார் நோன்பு, நலத்திட்ட உதவிகள் என விஜய் மக்கள் இயக்கத்தினர் அடுத்தடுத்து நகர்ந்து செல்வது, அரசியல் பாதையை தெளிவாக காட்டி வருகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். குறிப்பாக, ஈரோட்டில் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம், மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா? என்று கேட்டதற்கு, விரைவில் விஜய் பதிலளிப்பார் என்றார்.
’நடிகர்கள், சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாடச் சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் இறுக்கம் தளர்ந்து வருகிறது. நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டுள்ளது’ என்றார் விசிக தலைவர் திருமாவளவன். விஜயின் அரசியல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “திமுக, அதிமுகவை வைத்து 50 ஆண்டுகளை இந்த மண் கடந்து விட்டது. விஜய் அரசியலுக்கு வந்தால், இந்த அரசியல் வலிமையாக இருக்கும்’’ என்றார். அதிமுகவைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ’ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவரும் வரட்டும். வந்து பார்க்கட்டும்..’ என்கிறார்.
விசிலடித்து மகிழும் சினிமா ரசிகர்கள், கொடி பிடிக்கும் அரசியல் கட்சியின் தொண்டர்களாவார்களா…? விஜயின் மக்கள் இயக்கத்தினர் மக்கள் பிரதிநிதிகளாவார்களா? கட்சித் தலைவர் விஜயை இயக்குவது யார்..? பொருத்திருந்து பார்க்கலாம்…









