ஆற்றில் குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற  எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற  எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றில்  எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர், மேட்டூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் என மொத்தம் பத்து மாணவர்கள் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.
சரவணன் என்கிற மாணவனின் பிறந்த நாளை காவிரி ஆற்றின் கரையோரத்தில் கொண்டாடிய பின்னர் அனைவரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க சென்ற போது, கன்னந்தேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன், எருமப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துசாமி, எட்டிகுட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், எளம்பிள்ளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு மாணவர்களும் காவிரி ஆற்றின் தண்ணீரில் முழ்கினர்.
நான்கு சக மாணவர்கள் மீட்க முயன்ற போதும் முடியாமல் போனதால், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் தேவூர் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் 4 மணி நேரம் போராடி, 4 பேரின்  சடலங்களையும் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து சங்ககிரி மற்றும் தேவூர் போலீசார் சக மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது  நீரில் மூழ்கி நான்கு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.