சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் இன்று பதவியேற்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 60 நீதிபதிகள் பணியாற்றி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சக்திவேல், சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால், சென்னை தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்.
இவர்கள் அனைவருக்கும் இன்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 11-ஆக குறைந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் குறித்த விவரங்கள்:
1973 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கரூர் மாவட்டம், வாங்கலையில் பிறந்தவர் தான் நீதிபதி சக்திவேல் . இவர் திருச்சி சட்டக் கல்லுாரியில் சட்டப் படிப்பை முடித்து, 1998ல் பார் கவுன்சிலில் பதிவு செய்தார். 2011ல் மாவட்ட நீதிபதியாக நேரடியாக தேர்வு பெற்றார். உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக பதவி வகித்துள்ளார்.
1974ஆம் ஆண்டு மார்ச் மாதம், கரூர் மாவட்டம், தொரங்கல்பட்டி அருகில் உள்ள ஜல்லிவடநாயக்கன் புதுாரில் பிறந்தவர்தான் நீதிபதி தனபால். இவரும், திருச்சி சட்டக் கல்லுாரியில் சட்டப் படிப்பு முடித்து, 1998ல் பார் கவுன்சிலில் பதிவு செய்தார். 2011ல் மாவட்ட நீதிபதியாக நேரடியாக தேர்வு பெற்றார். தற்போது, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக உள்ளார்.
சிவகங்கை மாவட்டம், பிறன்மலையைச் சேர்ந்த நீதிபதி குமரப்பன் 1972 ஜூலையில் பிறந்தார். கோவை சட்டக் கல்லுாரியில் சட்டப் படிப்பு முடித்து, 1996ல் பார் கவுன்சிலில் பதிவு செய்தார். மாவட்ட நீதிபதியாக, 2011ல் நேரடியாக தேர்வு பெற்றார். 2018 முதல் 2021 வரை, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக பதவி வகித்தார். தற்போது, சென்னையில், தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதியாக உள்ளார்.
இதேபோல் நீதிபதி ராஜசேகரும் கடந்த 1998ல் வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்தார். 2011ல், மாவட்ட நீதிபதியாக நேரடியாக தேர்வு பெற்றார். மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராக பதவி வகித்துள்ளார். தற்போது, கோவை மாவட்ட முதன்மை நீதிபதியாக உள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா







