மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி என வரிசையாக பண்டிகைகள் நெருங்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆயுத பூஜை, தீபாவளி என வரிசையாக பண்டிகைகள் நெருங்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்வு வழங்க நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1 ஆம் தேதியைக் கணக்கிட்டு, இந்த அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அடிப்படை ஊதியம்/ ஓய்வூதியத்தில் 34 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) 4 சதவிகிதம் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்மூலம் 41.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “ மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வால் ஆண்டுக்கு ரூ.6,591 கோடியும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரண உயர்வால் ரூ.6261.20 கோடியும் அரசின் கருவூலத்திலிருந்து செலவாகும்” என்றார்.

 

மேலும், அடுத்த மூன்று மாதங்கள் இந்தியா முழுவதும் பல திருவிழாக்கள் கொண்டாடப்படும். பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் இன்றைய தீர்மானங்கள், பண்டிகைக் காலத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.