சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் இன்று (மார்ச் 20) 4 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்நிலையில் சென்னையிலும் வரும் 27-ந்தேதி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்புமனு பெறப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.
வடசென்னை தொகுதிக்கு பழைய வண்ணாரப்பேட்டை, பேசின்பிரிட்ஜ் சாலையில் உள்ள வடக்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டா ரவி தேஜா, முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.தனலிங்கம் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம் எனவும் தென் சென்னைக்கு அடையாறு, டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.பி.அமித் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பி.எம்.செந்தில்குமார் ஆகியோரிடம் வேட்புமனுக்களை அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், மத்திய சென்னைக்கு செனாய் நகர், புல்லா அவென்யூ சாலையில் உள்ள மத்திய வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜெ.பிரவீன் குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா ஆகியோரிடம் வேட்புமனுக்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் இன்று (மார்ச் 20) வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களின் விவரம்:
வடசென்னை – பி.மாரிமுத்து (ஆண்) சுயேட்சை
வடசென்னை – அஜித் குமார் (ஆண்) தாக்கம் கட்சி
தென் சென்னை – வேட்பு மனுத்தாக்கல் ஏதுமில்லை
மத்திய சென்னை – அ.செல்வ குமார் (ஆண்) தாக்கம் கட்சி
மத்திய சென்னை – டாக்டர் ஆர். கார்த்திகேயன் (ஆண்) நாம் தமிழர் கட்சி








