மணிப்பூரில் மைதேயி சமூகத்தைச் சேர்ந்த மாணவன்-மாணவி கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேரை மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) கைது செய்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வராததால் மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு நீடித்து வரும் வன்முறை சம்பவங்களில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மைதேயி சமூகத்தைச் சேர்ந்த மாணவன், மாணவி கடந்த ஜூலையில் காணாமல்போன நிலையில், இருவரும் கடத்தி கொலை செய்யப்பட்டது சமீபத்தில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக நீதி கேட்டு மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும் முக்கிய குற்றவாளிகள் மற்றும் அவரது மனைவி உள்பட 4 பேரை சுராந்த்பூரில் நேற்று மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) கைது செய்துள்ளனர் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் பிரேன் சிங் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “குற்றம் செய்த ஒருவர் தலைமறைவாகலாம், ஆனால் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது” என்று தெரிவித்துள்ள சிங், குற்றவாளிகள் சிறப்பு விமானம் மூலம் மாநிலத்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில், ராணுவம், துணைராணுவம் மற்றும் மாநில காவல்துறையும் முக்கிய பங்காற்றின. “கொடுமையான குற்றத்திற்காக” மாணவன்-மாணவி கொலையில் தொடர்புடையவா்களுக்கு மரண தண்டனை உள்பட அதிகபட்ச தண்டனை கிடைக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது’ என்றார். கொல்லப்பட்ட இரு மாணவர்களில் ஒருவரின் போனை, குற்றம் சாட்டப்பட்ட இரு பெண்களில் ஒருவர் பயன்படுத்தியதை, சிபிஐ கண்காணித்து வருவதாகத் தெரிகிறது.







