தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு ; தேர்தல் அதிகாரி தகவல்…!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது ;

தமிழ்நாட்டில் 5.73 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 14.59 லட்சமாக உள்ளது. சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் பார்வையாளர்கள் 326 பேர், பொதுப் பார்வையாளர்கள் 136, காவல் பார்வையாளர்கள் 40, செலவினப் பார்வையாளர்கள் 150 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 75.064 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் 1.06 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 975 இடங்களில் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிக்கு செல்போனை எடுத்துச்செல் அனுமதியில்லை. எல்லா வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் செல்போனை வெளியே வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 135-பி பிரிவின் கீழ் சட்டமன்ற தேர்தலுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; புகார் அளிக்க மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.