சென்னையில் கொரோனா தொற்று பாதுகாப்பு விதிகளை மீறியவர்களிடம் இருந்து 36 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிப்பதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்தது. அதன்படி, பாதுகாப்பு விதிமுறைகளை மீறியவர்களிடம் கடந்த ஒருவாரத்தில் 36 லட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பாதுகாப்பு விதிகள் நடைமுறைக்கு வந்தது முதல் தற்போது வரை சென்னையில் மட்டும் 3 கோடியே 71 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







