அதிரடியாக விளையாடிய தெ.ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு..!

தெ.ஆப்பிரிக்கா  ஆஸ்திரேலியாவுக்கு  இடையேயான போட்டியில் 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்கா அணி. உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள்…

தெ.ஆப்பிரிக்கா  ஆஸ்திரேலியாவுக்கு  இடையேயான போட்டியில் 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்கா அணி.

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது.  உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.  இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.

இதனைத் தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி-காக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினர். சீரான தொடக்கத்தை கொடுத்து ரன்களை குவித்த நிலையில் கேப்டன் டெம்பா பவுமா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வாண்டர் துசென் 26 ரன்களில் ஆட்டமிழக்க மார்கரம் மற்றும் டி-காக் ஜோடி சேர்ந்தனர்.

சிறப்பாக விளையாடிய டி-காக் சதமடித்து அசத்தினார். அவர் 106 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். கடந்த போட்டியிலும் டி-காக் சதமடித்திருந்தார். மார்கரம் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 44 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.  அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன்பின் களமிறங்கியவர்களில் க்ளாசன் (29 ரன்கள்), டேவிட் மில்லர் (17 ரன்கள்), மார்கோ ஜேன்சன் (26 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.