சுகாதாரத் துறையில் உள்ள 30,000 ஒப்பந்த பணியாளர்களை பணி வரன் முறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவத் துறை சம்பந்தப்பட்ட ஆய்வு பணிகள் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று அதிகளவில் பாதித்திருந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் சீரிய முயற்சியால் அவை தற்போது படிப்படியாக குறைந்துள்ளது என்றார்.
கொரோனா தொற்றை முழுவதும் ஒழிக்கவும், மூன்றாம் அலையில் ஏற்படும் பாதிப்பை தடுக்கவும் முதலமைச்சரின் ஆலோசனைப்படி சுகாதாரத் துறை தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது எனவும், கொரோனா 3 வது அலையை எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் சிகிச்சை மையத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையில் உள்ள ஒப்பந்த பணியாளர்கள் உட்பட 30 ஆயிரம் பணியாளர்களை கொரோனா பேரிடர் காலம் முடிந்த பிறகு, பணி நிரந்தரம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மேம்படுத்துவது தொடர்பாக வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
Advertisement: