நொய்டாவில் 300 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரட்டை அடுக்குமாடி கட்டடங்கள் வரும் 28ஆம் தேதி இடிக்கப்படவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டியுள்ளது. சுமார் 7 ஆயிரம் பேர் தங்கும் வசதி கொண்ட இந்த இரட்டை கோபுரத்தின் ஒரு டவரில் 32 தளங்களும், மற்றொரு டவரில் 29 தளங்களும் உள்ளன. இதுவரை யாரும் குடியேறாத நிலையில், இந்த கட்டடம் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டது என வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இரட்டை கோபுரத்தை வெடிவைத்து தகர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கட்டடங்களை தகர்க்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் இரட்டை கோபுர கட்டடங்கள் வெடிவைத்து தகர்க்கப்படவுள்ளன.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டடத்தின் அருகே உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்ட நிலையில், கட்டடத்தை இடிப்பதற்காக 37 ஆயிரம் கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்படவுள்ளன. வரும் 28ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு 9 விநாடிகளில் இரட்டை கோபுரங்கள் தூள் தூளாக தரைமட்டமாக்கப்படவுள்ள நிலையில், இடிந்த பின் கழிவுகளை எடுத்த செல்ல ஆயிரத்து 200 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.







