பிரதமர் மோடி கடந்த ஜனவரியில் பஞ்சாப் சென்றபோது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டிற்கு மாவட்ட காவல்துறை கடமை தவறியதே காரணம் என உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 5ம் தேதி பஞ்சாபின் பெரோஸ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருந்தார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பஞ்சாப் சென்றார்.
பொதுக்கூட்டம் நடைபெற்ற பெரோஸ்பூர் மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் செல்ல முடியாத அளவுக்கு மோசமான வானிலை நிலவியதால் அவர் ஹூசைனிவாலா வழியாக சாலை மார்க்கமாக பயணித்தார்.
அவரது வாகனம் வருவதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் பிரதமருக்கு எதிராக சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பிரதமரின் வாகனம் பியாராயானா மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் சிக்கிக் கொண்டது.
பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய பகுதி என்பதால், பிரதமரின் வாகனம் இவ்வாறு முற்றுகையிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையிலான ஐந்து நபர் விசாரணைக் குழு ஒன்றை நியமித்தது.
இக்குழு, சம்பவம் குறித்து தீர விசாரித்து அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்டது. அதில், பெரோஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது கடமையை செய்யத் தவறியதே பாதுகாப்பு குறைபாட்டிற்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை காக்க தவறிவிட்டதாகவும், போதுமான கால அவகாசம் இருந்தும், போதுமான பணியாளர்கள் இருந்தும் உரிய நடவடிக்கையை எடுக்க பெரோஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தவறிவிட்டதாகவும் உச்சநீதிமன்றம் அமைத்த குழு குற்றம் சாட்டியுள்ளது.
பிரதமரின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இக்குழு, இதன் மூலமே இதுபோன்ற பிரச்னைகள் மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என ஆலோசனை அளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க, உச்சநீதிமன்றம் அமைத்த இக்குழுவின் அறிக்கை அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.










