தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மூவர் பலி! ஆன்மீக சுற்றுலா சென்ற போது விபரீதம்!

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற இரண்டு பெண்கள் உட்பட மூவர் ஆற்றில்  மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த முருகன்…

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற இரண்டு பெண்கள் உட்பட மூவர் ஆற்றில்  மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் குடும்பத்துடன் திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்தையனார் கோயிலுக்கு இன்று ஆன்மீக சுற்றுலா வந்துள்ளார். அப்போது குடும்பத்தினர் அனைவரும் தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். இதில் 4 பேர் ஆற்றில் மூழ்கிய நிலையில் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நீரில் மூழ்கிய மூன்று பேரையும் மீட்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.  அப்போது, நீரில் மூழ்கிய மேனகா, சோலை ஈஸ்வரி மற்றும் சங்கரேஸ்வரன் ஆகிய மூவரையும் உயிரிழந்த நிலையில் மீட்டனர்.

குடும்பத்தினருடன் ஆன்மீக சுற்றுலா வந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மணிமுத்தாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.