மழை காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி டிரா ஆனதால் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி கைப்பற்றியது.
இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்தது. விரோட் கோலி 121, ரோகித் சர்மா 89, ஜடேஷா 61 ஜெய்ஷ்வால் 57, அஸ்வின் 56 ரன்கள் சேர்த்தனர்.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. சிராஜின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி, 255 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பிராத்வெய்ட் 75 ரன்கள் சேர்த்தார்.
இதன்மூலம் இந்திய அணி 183 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ரோகித் சர்மா 57, ஜெய்ஸ்வால் 38 ரன்களில் ஆட்டமிழந்தனர். 118 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதனையடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
பின்னர் 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த 2 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்திருந்தது. சந்தர் பால் 24 ரன்களும், பிளாக் அவுட் 20 ரன்களும் சேர்த்தனர்.
இந்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் தொடங்கும் முன்பே மழை பெய்தது. மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை. மழை தொடர்ந்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது. இதனையடுத்து டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.







