நாக்பூரில் நடைபெற்று வரும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓவர்களில் இந்திய அணிக்கு 91 ரன்களை இலக்காக வைத்துள்ளது ஆஸ்திரேலியா அணி.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2 வது டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி 7.30 மணிக்கு போட்டி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் மைதானம் ஈரப்பதம் நிறைந்து காணப்பட்டதால் போட்டி தாமதமாக 9.15 மணிக்கு தொடங்கியது.
இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக தாமதாக போட்டி தொடங்கியதால், 20 ஓவர்களுக்கு பதிலாக, 8 ஓவர்கள் மட்டுமே வீசப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக ஒரு அணியில் ஒரு பந்துவீச்சாளர் 2 ஓவர்களை மட்டுமே வீச இயலும்.
முதல் 2 ஓவர்கள் மட்டுமே பவர் ப்ளே ஒவர்களாக அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் தடுமாறி விக்கெட்டுகளை இழந்தாலும் நிலைத்து நின்ற வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் 90 ரன்களை குவித்தனர். இந்திய அணி சார்பில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. அந்த அணியில் கேப்டன் ஆரோன் பின்ச் 31 ரன்களை எடுத்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேமரான் கிரீன் 5 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதிரடி வீரர் கிலென் மேக்ஸ்வெல் ரன்கள் எதுவும் எடுக்காமலும், டிம் டேவிட் 2 ரன்களிலும் நடையைக் கட்டினர். இதையடுத்து களம் புகுந்த விக்கெட் கீப்பர் மேத்யூ வேடும் ஸ்டீவன் ஸ்மித்தும் நிதானமாக விளையாடினர். மேக்ஸ்வெல்லையும், டிம் டேவிட்டையும் அக்ஸர் படேல் வீழ்த்தினார்.
மேத்யூ வேட் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்மித் 8 ரன்களில் ரன் அவுட்டானார். இவ்வாறாக ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடுகிறது.








