முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றவுடன் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற்றது. இதில், 97 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ரூ. 67,452 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அரசு தெரிவித்தது.
இதையடுத்து, கடந்த நவ.16- ஆம் தேதி வரையில் 112 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.1,14,811.91 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 1,32,771 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றும் தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா அறிவித்திருந்தாா்.
இந்த நிலையில், முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி முதலீட்டாளா்கள் மாநாடு இன்று சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு மாநாட்டை துவக்கி வைக்கிறார். இதில், 85 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டின் இரண்டாவது பதிப்பிற்காக நாம் அனைவரும் ஒன்றுகூடுகிறோம்.
கடந்த ஆறு மாதங்களில், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தான பிறகு என்ன நடக்கிறது என்பதே உண்மையான வெற்றிக்கான அளவுகோலாகும்.
திட்டங்கள் செயல்பாட்டிற்கு முன்னேறுகின்றனவா? முதலீடுகள் தொழிற்சாலைகளாகவும், உற்பத்தியாகவும், வேலைவாய்ப்புகளாகவும் மாறுகின்றனவா? மக்களுக்கு அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறோமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களில்தான் எங்களது முழுக் கவனமும் உள்ளது.
முதலமைச்சர் விஜயின் தலைமையின் கீழ், தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யவும், திட்டங்கள் உறுதியுடனும் தடையின்றியும் முன்னேறவும், முதலீடுகள் தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளாகவும், வாய்ப்புகளாகவும், வளமான வாழ்வாகவும் மாறவும் வழிவகுக்கும் ஒரு வலுவான தொழில்துறைச் சூழலை உருவாக்குவதே எங்களது உறுதிப்பாடாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.




