மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனாவை 6-2 என வீழ்த்தியது இந்தியா!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடரில் சீனாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2026 ஹாக்கித் தொடரில் இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறது. போபாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் சுற்றின் நான்காவது ஆட்டத்தில் சீனாவை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் வெற்றியில் தீபிகா சேஹ்ராவத் முக்கியப் பங்கு வகித்தார். அவர் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை வலுப்படுத்தியது.

முதல் பாதியிலேயே ஹாட்ரிக் அடித்த தீபிகா

ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே தீபிகா சேஹ்ராவத் இந்திய அணிக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 6-வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், 14-வது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

15-வது நிமிடத்தில் சீன வீராங்கனை ஃபெங் கிங்மியாவோ ஒரு கோல் அடித்தார். இதற்குப் பதிலடியாக 19-வது நிமிடத்தில் இந்தியாவின் லால்ரெம்சியாமி கோல் அடித்தார். 22-வது நிமிடத்தில் நேஹா மற்றொரு கோல் அடிக்க, இந்தியாவின் முன்னிலை 5-1 என உயர்ந்தது.

34-வது நிமிடத்தில் சீன வீராங்கனை சென் டோங் கோல் அடித்தார். எனினும், 38-வது நிமிடத்தில் இந்தியாவின் சாக்‌ஷி ராணா கோல் அடித்து அணியின் முன்னிலையை 6-2 ஆக உயர்த்தினார். இறுதியில் இந்திய அணி இதே கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நான்கு வெற்றிகள்; ஜப்பானுடன் அடுத்த மோதல்

இந்தத் தொடரில் தீபிகா சேஹ்ராவத் இரண்டாவது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார். இதற்கு முன்பு தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றபோதும் அவர் ஹாட்ரிக் அடித்திருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக மலேசியாவை 4-1 என்ற கணக்கிலும், தென் கொரியாவை 2-1 என்ற கணக்கிலும், தாய்லாந்தை 7-0 என்ற கணக்கிலும் இந்தியா வீழ்த்தியிருந்தது.

இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் நாளை (நவம்பர் 25) ஜப்பானை எதிர்கொள்கிறது. நான்கு ஆட்டங்களின் முடிவில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் உள்ளன. இதனால் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.