ஜூலை 17, 18-ல் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம்- கே.சி.வேணுகோபால் ட்வீட்!

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை…

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. இந்த தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் பாஜக தீவிரம் காட்டும் நிலையில், மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பீகாரில் நடைபெற்றது. பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 17 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, முதலமைச்சர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹோமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்கள், 2வது கட்ட ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும், அதனை சிம்லாவில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, சிம்லாவில் பெய்து வரும் மழை காரணமாக பெங்களூருவுக்கு கூட்டம் மாற்றப்பட்டு அதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் 29-ம் தேதி அன்று தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாட்னாவில் மாபெரும் வெற்றி பெற்ற அனைத்து எதிர்கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, அடுத்த கூட்டத்தை பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் நடத்தவுள்ளோம். பாசிச மற்றும் ஜனநாயக விரோத சக்திகளைத் தோற்கடித்து, நாட்டை முன்னேற்ற தைரியமான பார்வையை முன்வைப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.