உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று துவங்கிய 125வது மலர் கண்காட்சியை
சுமார் 22 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த நிலையில் இரண்டாவது நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு வருகை புரிந்து மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்,
மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம் இச்சமயங்களில் வரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு கடந்த 6ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் 12வது காய்கறி
கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. உதகை ரோஜா பூங்காவில் கடந்த 13ம் தேதி
18 வது ரோஜா கண்காட்சி நடைபெற்று முடிவடைந்தது.
இதனை அடுத்து உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 125 வது
மலர்கண்காட்சியை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் மற்றும்
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 45 அடி உயரத்தில் 80 ஆயிரம் கார்நேஷன் மலர்களால் ஆன தோகை விரித்தாடும் வண்ண மயில், சிறுத்தை, புலி, வண்ணத்துப்பூச்சி, வரையாடு, தண்ணீர் குழாய் போன்ற அலங்கார வடிவமைப்புகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று துவங்கிய மலர் கண்காட்சியை சுமார் 22 ஆயிரம் சுற்றுலா
பயணிகள் கண்டு ரசித்து சென்றுள்ள நிலையில், இரண்டாவது நாளாக நடைபெற்று வரும்
மலர் கண்காட்சிகளை கண்டு ரசிக்க இன்று தமிழக மட்டுமல்லாமல் கேரளா கர்நாடகா
உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை
புரிந்து மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
மேலும் இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், சமவெளி பகுதிகளில்
வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் உதகையில் நடைபெற்று வரும்
மலர் கண்காட்சியினை கண்டு ரசிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஒரே இடத்தில்
ஆயிரக்கணக்கான வண்ண மலர்களை காண்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.







