விஜய்யின் தந்தை என்று பெருமையுடன் உணர்வதாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி விஜய் அறிமுகமான நாளைய தீர்ப்பு திரைப்படம் வெளியானது. விஜய் அறிமுகமாகி 29 ஆண்டுகள் நிறைவு பெற்று 30ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆரம்ப காலங்களில் விஜய் திரைத் துறையில் பயணிக்க அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் பங்கு முக்கியமானது.
இந்த நிலையில் ஒரு தந்தையாக விஜய்யை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், விஜய்யை நாளைய தீர்ப்பு படம் மூலமாக ஹீரோவாக அறிமுகம் செய்தேன், அன்றே விஜய் மிகப்பெரிய உயரம் தொடுவார் என தெரியும். ரசிகன் திரைப்படம் மூலமாகவே விஜய் ஹீரோவாக மக்கள் மத்தியில் பிரபலமானார். படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி கொண்டே உள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் மகன் விஜய் என்ற நிலை மாறி விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்ற பெருமையுடன் உள்ளேன். பெருமைமிக்க ஒரு தந்தையாக கருதுகிறேன் என்ற் குறிப்பிட்டார்.
சினிமாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் சமூக அக்கறை வேண்டும். விஜய்க்கும் அந்த சமூகம் அக்கறை உள்ளது, அதில் தொடர்ந்து அவர் பயணிக்க வேண்டும் என்ற எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் பெயரில் சமூக சேவைகள் செய்து வருவதால் தான் உள்ளாட்சி தேர்தலில் அந்த வெற்றி கிடைத்துள்ளது. விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.








