அசாமில் குழந்தை திருமணம் தொடர்பாக 2 ஆயிரத்து 500 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி, அசாமில் 15 வயது முதல் 19 வயது வரையிலான பெண்களில் 11.7 சதவீதம் பேர் கருவுருகின்றனர். அசாமில் உள்ள நிறைய மாவட்டங்களில் பெண்களுக்கு 18 வயதிற்கு முன்னதாக திருமணம் செய்கின்றனர். இந்நிலையில்தான் அசாம் அரசு குழந்தை திருமணங்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக்கி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஜனவரி மாதம் குழந்தைத் திருமண தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்திய பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பால் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக 4 ஆயிரத்து 74 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2026 ஆம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தைத் திருமணத்தை முற்றிலும் ஒழிக்கத் திட்டமிட்டுள்ளதாக அசாம் அரசு கடந்த அமைச்சரவையில் முக்கிய முடிவு எடுத்தது.
அசாமில் குழந்தைத் திருமணம் செய்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அந்த மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்திருந்தார். அதேபோல் 14 வயதிற்கும் குறைவான சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, அசாமில் குழந்தை திருமணத்தை ஒழிக்க அசாம் அரசு களத்தில் இறங்கியது. அதன்படி, 18 வயதிற்கு உள்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த 2 ஆயிரத்து 258 பேரை போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். குழந்தை திருமணம் செய்து வைத்த மதபோதகர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், குழந்தை திருமணம் தொடர்பாக 4,074 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன.
இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென பெண்கள் சிலர் காவல் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், குழந்தை திருமணங்கள் அனைத்தும் சட்டவிரோதமானது என அறிவிக்கப்படும் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்து 500 பேரை அசாம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
-ம.பவித்ரா