அமர்நாத் புனித யாத்திரை சென்று சிக்கி தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி அளித்துள்ளார்.
பனிமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளதால் தமிழ்நாட்டிலிருந்து அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பயணிகள் தமிழ்நாடு வர முடியாமல் சிக்கியுள்ளனர். இதனையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த நபர்களை மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரி வீடியோ வெளியிட்டு அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஸ்ரீநகருக்கும் காஷ்மீருக்கும் இடையில் பனிச்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டதால் மணி காம்ப் என்ற இடத்தில் முகாமிட்டு 4 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் மாட்டி சிக்கி தவிப்பதாக அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் அந்த வீடியோவில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசின் உத்தரவின்பேரில், தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டார். தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் சாலை மார்க்கமாக ஜம்மு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து, ரயில் மூலம் இன்று அதிகாலை டெல்லி வந்தனர். தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் சென்னை திரும்புகின்றனர்.
இந்நிலையில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
அமர்நாத் புனித யாத்திரைக்கு சென்றிருந்த 25 தமிழர்கள் பனி மலையில் சிக்கி தவித்த நிலையில், மறுவாழ்வுத் துறை, இந்திய தூதரகம் மற்றும் பிறமாநில அதிகாரிகளுடன் உதவியுடன் 25 தமிழர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் வெள்ளப் பெருக்கில் சிக்கி உள்ளவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள்
96000 23654 என்ற சிறப்பு உதவி எண்ணை தொடர்பு கொண்டு சிக்கி உள்ளவர்களின்
விவரங்களை தெரிவிக்கலாம். அவர்களுக்கு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி மறுவாழ்வு துறை மூலம் தேவையான உதவிகள் உடனடியாக வழங்கப்படும் என தெரிவித்தார்.









