டி.என்.பி.எல் கிரிக்கெட் : 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி கோவை அணி அசத்தல்

டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நெல்லைக்கு எதிரான ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கோவை அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல்…

டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நெல்லைக்கு எதிரான ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கோவை அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நெல்லையில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய தொடக்க  ஆட்டக்காரர்கள் சுஜய் 7  ரன்னிலும், சச்சின் 12 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி  அளித்தனர்.
பின்னர் களம் இறங்கிய வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு  205 ரன்கள் குவித்தது.  சுரேஷ்குமார் 57 ரன்களையும், முகிலேஷ் 51 ரன்களையும் , ரகுமான் 50 ரன்களையும் சேர்த்தனர்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களம் இறங்கியது. ஆனால் அந்த அணி வீரர்கள்  சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.  இதனால் 15 ஓவர்களில் 101 ரன்களில் நெல்லை அணி சுருண்டது. அதிகபட்சமாக அருண் கார்த்திக் 27 ரன்கள் எடுத்தார்.
சுழற்பந்து வீச்சாளர் ஜதாவேத் சுப்பிரமணியன் 4 விக்கெட், ஷாருக்கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோவை அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற கோவை அணிக்கு ரூ.50 லட்சமும், நெல்லை அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.