மதுரையில் அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர்.
சினிமா பைனான்சியர் அன்பு செழியனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரி அலுவலர்கள் 40க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் 30 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம், கீறைத்துறை பகுதியில் உள்ள வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் நேற்று வருமானவரி துறை சோதனை நடைபெற்றது.
பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக வந்த தகவலின் அடிப்படையில் கடந்த 2020ம் ஆண்டு படத்தை தயாரித்த ஏஜிஎஸ் சினிமா நிறுவனம், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடத்தியிருந்தனர்.
மேலும், அப்போது அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது. ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், நேற்று மீண்டும் அன்பு செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், மதுரையில் விடிய விடிய சோதனை நடைபெற்று வருகிறது. அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் 15 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனால் மதுரையில் உள்ள அவரது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இன்று காலையிலும் தொடர்ந்து வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. விடிய விடிய அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது சினிமா பிரபலங்களுக்கு இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
– இரா.நம்பிராஜன்








