2026 சட்டமன்றத் தேர்தல் : தவெக சார்பில் பிப்.6 முதல் விருப்பமனுக்கள் விநியோகம்….!

தவெக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனுக்கள் வரும் 6 ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.

தமிழ் நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தவெக சார்பில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனுக்கள் வரும் 6 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயளாலர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்களுக்கு விருப்ப மனு விநியோகம் கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும். அந்த வகையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம்.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், வரும் 06.02.2026 வெள்ளிக்கிழமை முதல் 14.02.2026 சனிக்கிழமை வரை கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன.

பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும். இதைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.