2026-27-ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். இதில் உயர்கல்வித்துறைக்கு ரூ.8393 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது, “தமிழ்நாடு நீட் தேர்வினை கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்வில் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு ஆகியவை எதிர்காலத் தலைமுறையினரின் உயர்கல்வி வாய்ப்பினை பெரிதும் பாதிக்கின்றன. எனவே, நீட் தேர்வு முறையினை உடனடியாக இரத்து செய்து முந்தைய முறையான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான சேர்க்கையை தொடர்ந்திட ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.
வெற்றி மடிக்கணினித் திட்டம் – 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிலான இத்திட்டம் கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் ஒரு கருவியாக அமையும்.
மாநிலம் முழுவதும் மாணவர் தங்கும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 10 கோடி ரூபாய் ஆரம்ப மூலதனத்துடன் தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம் (TNSHIC) என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) ஒன்றை நமது அரசு அமைக்கும்.
TN-SUDAR (மாணவர் குடியிருப்புகளின் மாநில அளவிலான மேம்பாடு, வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்) – இத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் நவீன படுக்கை வசதிகளுடன் கூடிய 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள் கட்டப்படும். சுமார் 3,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு-தனியார் கூட்டாண்மைமாதிரியின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு மாநில அரசின் 20 சதவீத கட்டுமான மானியம் (அடுத்த இரண்டு நிதியாண்டுகளில் 640 கோடி ரூபாய்) வழங்கப்படும்.
மதுரை சிறப்பு அரசு சட்டக் கல்லூரி – 2027-28 ஆம் கல்வியாண்டில் 300 மாணவர்களின் சேர்க்கையுடன் தொடங்கப்படும். இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்கு 8,393 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ.3.38 கோடி ஒதுக்கீடு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் SSC, RRB, IBPS போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
வெற்றி திறன் பயிற்சித் திட்டம் – 12 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் 1 இலட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். அரசு & தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து முதற்கட்டமாக 20,000 இளைஞர்களுக்கு பணியிடப் பயிற்சி வழங்கப்படும் பட்டதாரிகள் மற்றும் தொழிற்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில் வளர்ச்சித் திட்டம்– தனித்துவமான செயற்கை நுண்ணறிவுப் பாடத்திட்டத்தினை வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும்
2031 ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 இலட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும். 5,000 பள்ளிகளிலிருந்து கூடுதலாக 2,600 பள்ளிகளுக்கு TN SPARK விரிவுபடுத்தப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.




