ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான 17-வது சீசன் இந்தியாவில் தான் நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமல் கூறியதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐயால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் முதலாக தொடங்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
16-வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரையில் இந்தியாவில் நடத்தப்பட்டது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு சென்றன. கடைசியாக ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான பேட்டிங்கால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியனானது.
இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான ஐபிஎல் 17-வது சீசன் நடக்கும் அதே வேளையில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஐபிஎல் போட்டிகளை வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. 2024-ம் ஆண்டுக்கான ஐபிஎல் 17-வது சீசனானது இந்தியாவில் தான் நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடத்தப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக எல்லாம் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்படாது என்று கூறியதாக தகவல் தெரிவிக்கின்றது. மேலும் 2024-ம் ஆண்டு ஐபிஎல் இந்தியாவில் தான் நடத்தப்படும் என்று திட்டவட்டமாக கூறப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.







